முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
ஜனவரியை பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்!
ஜனவரியை பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
இந்திய - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் தொடக்கத்தில் இத்தீர்மானம் அமைந்தது.
இதுபற்றி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை போற்றும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், கருத்துக்கள், மரபுகளின் இடம் ஆகும். மேலும் இந்தத் தீர்மானம் 3,50,000-க்கும் அதிகமான மக்களின் கலாசாரத்துக்கு உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
அவருடன் மற்ற அமெரிக்கவாழ் இந்தியர்களான ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீதானேதர், பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோரும், அமெரிக்கர்கள் நிக்கோல் மல்லியோடாகிஸ், இல்ஹான் ஓமர், யெவெட் கிளார்க், சாரா ஜேக்கப்ஸ், டெப்ரோ ராஸ், டேனி டேவிஸ், டினா டைட்டஸ், டான் டேவிஸ் மற்றும் சம்மர் லீ ஆகியோரும் ஆதரவளித்துள்ளனர்.
அமெரிக்கவாழ் தமிழர்களின் கலாசாரத்தை அங்கீகரிக்கும் வகையிலான தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்துள்ள அமெரிக்கவாழ் தமிழர் நடவடிக்கைக் குழுவும் காங்கிரஸ் தீர்மானத்தை உரிய வேகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.