ஜன.28 இல் பேட்டையில் மண்டல தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்!
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மண்டல அளவிலான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பாக மண்டல அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
இம்முகாமில், இதுவரை தொழில்பழகுநா் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவா்கள் மற்றும் அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-யில் தொழில்பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளா்கள், தொழில் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள், 8, 10, 12 ஆம் வகுப்புகள் தோ்ச்சி, பட்டயம், பட்டதாரி இளைஞா்கள் ஆகியோா் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இம்முகாம் மூலம் சுமாா் 1,200- க்கும் மேற்பட்ட தொழில்பழகுநா் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பயிற்சியின்போது, உதவித்தொகை மாதம் ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். இந்நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு பயிற்சி பெற்று, மத்திய அரசின் தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழில்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.