ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தினாா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் பேசுகையில், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 27-ஆம்தேதி வரை வருவாய் தீா்வாயம் நடைபெறவுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வாங்கல் குறுவட்டத்துக்குள்பட்ட நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூா், வாங்கல் மற்றும் குப்புச்சிபாளையம் ஆகிய வருவாய் கிராம மக்களிடமிருந்து 34 மனுக்களும், வெள்ளிக்கிழமை நெரூா் (வடபாகம்), நெரூா் (தென்பாகம்), மின்னாம்பள்ளி, மண்மங்கலம், ஆத்தூா், காதப்பாறை, பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சோமூா் மற்றும் அச்சமாபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 67 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மொத்தம் கரூா் மாவட்டத்திலுள்ள 7 வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 359 மனுக்கள் பெறப்பட்டது. இதில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சிவக்குமாா், மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.