ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லப் பிராணிகள் விற்பனை அமோகம்!
ஜமீன் குடும்பம்; சினிமா; லவ் மேரேஜ்; பிரிந்து சென்ற கணவர் - ‘சுந்தரி அப்பத்தா’ பர்சனல்ஸ்
சின்னத்திரை பாட்டிகளிலேயே ட்ரெண்ட் செட்டிங் பாட்டி சுந்தரி சீரியலில் வந்த அப்பத்தா பி.ஆர் வரலட்சுமி அவர்கள்தான். அந்த சீரியல் முழுக்க துறுதுறுன்னு நடிச்ச அவங்களோட பர்சனல், சினிமா என்ட்ரி, அடுத்து என்னென்ன சீரியல்கள்ல நடிக்கிறாங்கன்னு மனம் திறந்து பல விஷயங்களை நம்மளோட ஷேர் பண்ணிக்கிட்டாங்க.
தர்ம பத்தினியில் தொடங்கிய பயணம்:
’’நகரியில எங்களோடது பெரிய ஜமீன் குடும்பம். தாத்தா நிறைய தான, தர்மங்கள் செஞ்சவர். ஸ்கூல், காலேஜ்லாம் கட்டியிருக்கார். அப்பா ராமச்சந்திர நாயுடு நான் பிறக்கிறதுக்கு முன்னாடி சில படங்கள் தயாரிச்சிருக்காராம். அவ்ளோ தான் அதைப்பத்தி தெரியும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு எங்க வீட்ல நாங்க மொத்தம் ஏழு பேர். சின்ன வயசுல நான் நடிகை சாவித்திரி சாயல்ல இருப்பேன். அதனால, எங்க தெருவுல இருக்கிறவங்க எல்லாம் என்னை சாவித்திரின்னு கூப்பிடுவாங்க. எங்க வீட்ல பால் கறக்குறதுக்காக ஓர் அம்மா வருவாங்க. அவங்களோட சொந்தக்காரர் ஒருத்தர் சினிமா ஃபீல்டுல இருந்தாரு. அவரும் ஊருக்கு வர்றப்போ எல்லாம் என்னைப் பார்த்தா ’சாவித்திரி அம்மா’ன்னுதான் கூப்பிடுவாரு. இதையெல்லாம் கேக்குறப்போ நாமும் ஒரு நடிகையானா எண்ணங்கிற எண்ணம் என் மனசுக்குள்ள வர ஆரம்பிச்சுது. எப்படியோ எங்க அம்மாவையும் அண்ணனையும் காக்காப்புடிச்சு அவர் வீட்டுக்குப் போய் போட்டோ ஷூட் பண்ணேன். அந்த போட்டோக்களைப் பார்த்துட்டு ‘தர்ம பத்தினி'ன்னு ஒரு தெலுங்குப்படம் வாய்ப்பு வந்துச்சு.
அதுக்கப்புறம் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இதுக்கிடையில எனக்கு தமிழ் சுத்தமா தெரியாதுங்கிறதால, ரெண்டு வருஷம் தமிழ் நாடகங்கள்ல நடிச்சேன். அங்க தான் என்னோட கணவரை மீட் பண்ணேன்’’ என்றவர், சற்று நிறுத்தி, ‘’அது பெரிய கதை. அதைப்பத்தி கடைசியில சொல்றேன்’’ என்றவர், தமிழ்ல நடிக்க ஆரம்பித்ததுபற்றி பேச ஆரம்பித்தார்.
வாழையடி வாழை - சங்கர்லால் - நவரத்தினம்:
’’என்னோட முதல் படம் ’வாழையடி வாழை.’ நடிகை பிரமிளாவும் நானும் அதுல அக்கா தங்கச்சியா நடிச்சிருப்போம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ரெண்டு ஹிந்தி படம்னு சினி ஃபீல்டுல ஒரு ரவுண்டு வந்தேன். ’சங்கர்லால்’ படத்துல கமல் இரட்டை வேடத்தில் நடிச்சிருப்பார். ஒரு கமலுக்கு ஜோடி ஸ்ரீதேவி; இன்னொரு கமலுக்கு ஜோடி நான். எம்.ஜி.ஆர் கூட ’நவரத்தினம்’ படத்துல நடிச்சிருக்கேன். அந்தப் படத்துல நான் தற்கொலை பண்ணிக்கப் போகும்போது அவர் வந்து காப்பாத்துற மாதிரி சீன். அவர் காப்பாத்துறப்போ அவர் முகத்தைப் பார்த்து, எனக்கு சாகுறத தவிர வேற வழியில்ல; என்னை விட்ருங்க’ அப்படின்னு நான் டயலாக் பேசணும். ஆனா, என்னால எம்.ஜி.ஆரோட கண்களைப் பார்த்து டயலாக் சொல்லவே முடியல. ரெண்டு டேக் வாங்கிட்டேன். ஆனாலும், அவர் கண்களைப் பார்த்து என்னால பேச முடியல. ’என்னம்மா, என்னாச்சு’ன்னு டைரக்டர் விசாரிச்சார். ’என்னால அவர் கண்ணைப் பார்த்து பேச முடியல சார்’னு சொன்னேன். அவர் அப்படியே ஷாக் ஆகி ’நீ சொல்றது உண்மைதான்மா. அவரோட கண்களை நம்மால நேருக்கு நேரா பார்க்கவே முடியாது. அதுதாம்மா ராஜபார்வை. நீ அவரோட கண்களைப் பார்க்காம டயலாக் பேசிடு’ன்னு சொன்னார். கடைசியில அப்படித்தான் செஞ்சேன்.
’அவளுக்கு ஆயிரம் கண்கள்’ல நானும் ஜெயலலிதாவும் தோழிகளாக நடிச்சோம். அதுல எனக்கு ஜெய்சங்கர் ஜோடி. ஜெயலலிதா கண்களையும் பார்த்து பேச முடியாது. அதுவும் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். தமிழ்ல ரஜினியைத் தவிர்த்து மற்ற எல்லார் கூடவும் நடிச்சிருக்கேன். பாலு மகேந்திரா சார் முதல் முறை ஃபிரேம் வெச்சது எனக்குத்தான். அதுவொரு மலையாளப்படம். பேரு `பணி முடக்கு'. அதுல நான் டூயல் ரோல் செஞ்சிருந்தேன். அந்தப் படத்துக்காகத்தான் அந்த முதல் ஃபிரேம் பாக்கியம் கிடைச்சிது. ஆனா, இத்தனை படங்கள்ல நான் நடிச்சதுக்கு ஞாபகார்த்தமா என்கிட்ட ஒரு போட்டோ கூட கிடையாது’’ என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் பி.ஆர். வரலட்சுமி.
அப்பாவுக்கு சினிமா பிடிக்கல!
’’எங்கப்பாவுக்கு நான் சினிமாவுல நடிக்கிறது சுத்தமா பிடிக்கல. அம்மா தான், ’ஆசைப்பட்டு சினிமாவுக்குப் போயிட்டே. அடக்க ஒடுக்கமா இருக்கணும்’னு சொல்லிட்டே இருப்பாங்க. அந்த வார்த்தைகள் என் காதுல ஒலிச்சிட்டே இருந்ததாலேயோ என்னவோ, நான் உண்டு என் நடிப்பு உண்டுன்னுதான் இருந்தேன்; அப்படியேதான் இப்போ வரைக்கும் இருக்கேன். ஆனா, எங்கப்பா, நான் நடிச்ச ஸ்டில்ஸ், வாங்கின ஷீல்டு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டாரு. சிலதை உடைச்சும் போட்டிருக்காரு. அவரையும் குத்தம் சொல்ல முடியாதுதான். ஆனா, எங்க குடும்பத்தோட பேரைக் கெடுக்கிற மாதிரி நான் நடந்துக்கலைங்கிறதுதான் உண்மை. எனக்குன்னு வந்த படங்களை மட்டும் செஞ்சிட்டு, என் வாழ்க்கை இந்த சினிமா ஃபீல்டுக்குள்ள ரொம்ப மரியாதையா தான் இருந்துச்சு’’ என்றவர், நடிப்புக்காக ‘கலைமாமணி’ விருது வரைக்கும் பெற்றிருக்கிறார்.
’’கல்யாணமாகி மகள் பிறந்ததும் குழந்தையை வளர்க்கிறதுக்காக 10 வருஷம் நடிக்கிறதை நிறுத்தினேன். அதுக்கப்புறம் ஜமீன் கோட்டை, பூவே உனக்காக, நான் அவன் இல்லை, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, படை வீட்டு அம்மன்னு தமிழ்ல செகண்ட் ரவுண்டும் வந்தேன். தூர்தர்ஷன்ல வந்த ‘கரிப்பு மணிகள்’ல ஆரம்பிச்சு நிறைய சீரியல்கள்லேயும் நடிச்சேன்’’ என்றவரிடம், ’அப்பாவுக்கு நீங்க சினிமாவுல நடிக்கிறது பிடிக்கல; அப்போ உங்க கணவருக்கு’ என்றோம்.
அவர் இருக்கார்!
’’இன்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்மா நாங்க. எங்க குடும்பத்துக்கு நாங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டது பிடிக்கவே இல்ல. விளைவு, ஏதோவொரு பிரச்னை வந்துகிட்டே இருந்துச்சு. என் கணவரால, எங்க குடும்பத்தினரை சமாளிக்கவே முடியல. ஒருநாள், ’ஸாரி வரலட்சுமி’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாரு. 30 வருஷம் ஓடிப் போயிடுச்சு. எங்க இருக்கிறாரு; எப்படி இருக்கிறாருன்னு இதுவரைக்கும் தெரியல. ஆனா, எங்க இருந்தாலும் நல்லாயிருப்பார். என்னையும் எங்க பொண்ணையும் நினைச்சுக்கிட்டுதான் இருப்பார். அதுமட்டும் நிச்சயம். கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் சொல்லிட்டுப்போனாரு. நீ ஹிந்து பேப்பர் வாங்குறதை மட்டும் விட்றாத; என்னைப் பத்தின நல்லதோ கெட்டதோ அதுல வரும். அதுவரைக்கும் நீ தாலியைப் போட்டுட்டுதான் இருக்கணும். கழட்டக்கூடாது’ன்னு சொன்னாரு. உலகத்துல எங்கேயோ ஒரு இடத்துல அவர் உயிரோட இருக்கார். அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். அவர் போனதுக்கப்புறம் கூடப்பொறந்த அண்ணன் தம்பிங்க எங்களை டேக் கேர் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு தம்பி ரொம்ப ஆதரவா இருப்பான்’’ என்று பர்சனல்ஸ் பகிர்ந்துகொண்டவர், சுந்தரிக்குப் பிறகு தற்போது மூன்று சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES:
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...