இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்து செய்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளுக்குப் பிறகு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். ஆனால், இந்த சந்திப்புகள் குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடப்படாமல் இருக்கின்றன.
இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் பாஜக தலைவர் சத் சர்மா மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா ஆகியோர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்புகளின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 -வது ஆண்டின் நிறைவு நாளில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என இணையத்தில் பரபரப்பாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் சந்திக்க தயார் எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மாநில அந்தஸ்து குறித்து திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:
“ஜம்மு - காஷ்மீரில் நாளை என்ன நடக்கலாம் என்பது பற்றிய சாத்தியமான விஷயங்களை நான் கேள்விப்பட்டேன். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எதுவும் நடக்காது எனத் தோன்றுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு எதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், நாளை அல்ல. மத்திய அரசுடன் சந்திப்பையோ, பேச்சுவார்த்தையோ நான் நடத்தவில்லை. வெறும் உள்ளுணர்வு மட்டுமே. நாளை இதே நேரத்தில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜம்மு - காஷ்மீருக்கு இந்த கூட்டத்தொடரிலேயே மாநில அந்தஸ்து வழங்கும் சட்ட வடிவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் கூட்டுக் கடிதம் அனுப்பி இருந்தனர்.