அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி கவுன்சிலர் லோகநாதன் `அங்கபிரதட்சணம்’ செய்வதைப்போல இன்று தண்ணீர் தேங்கிய குண்டும், குழியுமான சாலையில் நீண்ட படுத்து உருண்டபடியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்ததும், மேயர் சுஜாதா அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மேயர் சுஜாதா, ``சாலைப் போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் நானும், கமிஷனரும் நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றோம். சாலை போடும் நேரத்தில், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க இந்தப் பகுதியில் ஒரு சாலைகூட போடவில்லை. பாதாளச் சாக்கடை பணியால் வேலூர் மக்கள் அவதிப்பட்டார்கள். இப்போது பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட்டு, மாநகராட்சியில் 80 சதவிகித சாலைகள் போடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை இங்கேயும் சாலை அமைக்கப்படும்’’ என்றார்.

அப்போது, கூடியிருந்தவர்கள் ``இவ்வளவு நாள்களாக எங்கே போயிருந்தீர்கள்? வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடக்கிறது. பால்குடம் எப்படி எடுத்துக்கொண்டு வர முடியும்’’ என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால், மேயர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேயருடன் வந்திருந்த ஒப்பந்ததாரர், ``அடுத்த வாரத்தில் சாலைப் போட்டுத் தருகிறோம்’’ என்றபோது, ``மேயர் இந்த வெள்ளிக்கிழமை என்கிறார். நீங்கள் அடுத்த வாரம் என்கிறீர். நாங்கள் எதை நம்புவது’’ எனக் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அந்த ஒப்பந்ததாரர் ``இந்த வாரத்தில் ரெடிமிக்ஸ் கொட்டுகிறோம். மழைப் பெய்வதால், உடனடியாக வேலையை ஆரம்பிக்க முடியாது. அடுத்த வாரத்தில் தார் ரோடு போடுகிறோம்’’ என்றார். இதைக் கேட்டு கொதித்துப்போன மக்கள், ``நீங்கள் கட்டிக்கொடுத்த பாத்ரூம் ஏற்கெனவே நாறிக்கொண்டு இருக்கிறது. சாலைப் பிரச்னைக்கும் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். மாநகராட்சியில் எங்களை மதிப்பதே இல்லை’’ என்றுக்கூறி தொடர்ந்து மல்லுக்கட்டியதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் சென்று சமரசப்படுத்தியதால், கூட்டம் கலைந்தது.