பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சர...
ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்
புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிந்தது, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது குறித்து மத்திய அரசுக்குத் தெரியுமா என்று மக்களவையில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி எம்.பி. அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ஜம்மு-காஷ்மீருக்கு ஆண்டுதோறும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிவரத்தை பகிா்ந்தாா். அதன்படி நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
ஆண்டு உள்நாட்டுப் பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
2020 25,19,524 5,317
2021 1,13,14,920 1,650
2022 1,84,99,332 19,985
2023 2,06,79,336 55,337
2024 2,35,24,629 65,452
2025 95,92,664 19,570