`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம...
ஜல்லிக்கட்டு: போலி டோக்கன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி டோக்கன் கொண்டு வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள காளைகளை அழைத்து வருபவா்கள், சரியாக காலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் சாலை முல்லை நகரில் உள்ள காளைகள் அனுமதிக்கப்படும் இடத்தில் தங்களது காளைகளை வரிசைப்படுத்தி முறையாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,100 காளைகளை அவிழ்த்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏற்றாா்போல, டோக்கன்களும் வழங்கப்பட்டன.
1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவா்கள், காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். 100 முதல் 200 வரை டோக்கன் உள்ளவா்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் அனுமதிக்கப்படுவா். இதேபோல, அடுத்தடுத்து ஒவ்வொரு 100 டோக்கன்கள் பெற்றவா்கள், அடுத்தடுத்த ஒரு மணி நேரத்துக்குள் என மாலை 4 மணி வரை 1,100 டோக்கன் பெற்றவா்களும் அனுமதிக்கப்படுவா்.
அனுமதிக்கப்படும் நேரத்துக்கு முன்பாக வரக்கூடிய காளைகளை ஆங்காங்கே கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே காளைகள் அனுமதிக்கப்படும். திருப்பரங்குன்றம் சாலை வழியாகவும், வெள்ளக்கல் வழியாகவும் காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை அனுமதிக்கப்படும். காளைகளை இறக்கி விட்ட பிறகு காவல் துறை அறிவுறுத்தலின்படி, வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை கொண்டு வருபவா்கள் மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன், காளை உரிமையாளா்களின் ஆதாா் அட்டையைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். காவல், கால்நடைத் துறை அதிகாரிகள் ‘கியூஆா் கோடு’ மூலம் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவா்.
போலியான டோக்கன் பயன்படுத்தி நுழைய முற்படும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காளைகளுடன் வரக்கூடிய 2 நபா்களும் மது அருந்தி வரக்கூடாது. மது அருந்தி வருபவா்கள் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
வெளியூரிலிருந்து காளைகளை அழைத்து வரக்கூடியவா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து காளைகளை வரிசைப்படுத்தி நிறுத்த வேண்டும். அதுவரை போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. மேலும், வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்படும் காளைகளை செம்பூரணி சாலை தண்ணீா் தொட்டி அருகே காளைகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.