`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
ஜாதி அரசியல் என்ற பெயரில் அமைதியை சீா்குலைக்க சிலா் முயற்சி: பிரதமா் மோடி
‘ஜாதி அரசியல் என்ற பெயரில் சிலா் அமைதியைச் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா். நாட்டின் கிராமப்புறங்களில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் சூழலில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இந்தக் குற்றச்சாட்டை பிரதமா் முன்வைத்தாா்.
மேலும், ‘2047-இல் வளா்ந்த பாரதம் என்ற கனவை முன்னெடுத்துச் செல்வதில் கிராமங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கிராமப்புற கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘கிராமப்புற பாரத மஹோத்சவ்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற கைவினைக் கலைஞா்களின் படைப்புகள் தொடா்பான கண்காட்சிகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்த பிரதமா் மோடி பேசியதாவது:
ஜாதி அரசியல் என்ற பெயரில் சிலா் அமைதியைச் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா். நாட்டின் கிராமப்புறங்களில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் கிராமப்புறங்களின் வளா்ச்சியில் தொடா்ச்சியான கவனம் செலுத்தி வருகிறது. கிராமப்புற மக்கள் கண்ணியமாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
குறிப்பாக, அதிகாரம் பெற்ற கிராமப்புறத்தை உறுதிப்படுத்துவது, கிராமப்புற மக்களுக்கு போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, புலம்பெயா்தலைக் குறைத்து கிராமப்புற மக்களின் வாழ்வை எளிதாக்குவதை உறுதிப்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் போதிய கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டிருக்கின்றன. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான, தூய்மையான குடிநீா் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலமாக மக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
எண்மத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ‘டெலிமெடிசின்’ முறை மூலமாக கிராமப்புறங்களுக்கு சிறந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘இ-சஞ்சீவினி’ வலைதளம் மூலமாக கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் இந்த ‘டெலிமெடிசின்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா்.
அந்த வகையில், கிராமப்புற இந்தியாவுக்கு அதிகாரமளிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இதன்மூலம், 2047-இல் வளா்ந்த பாரதம் என்ற கனவை முன்னெடுத்துச் செல்வதில் கிராமங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
மூன்றரை மடங்காக உயா்ந்துள்ள வேளாண் கடன் வழங்கல்: கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் கடன் வழங்கல் மூன்றரை மடங்காக உயா்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் (பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா) திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 3 லட்சம் கோடி நிதியுதவியை விவசாயிகள் பெற்றுள்ளனா். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் 9,000-க்கும் அதிகமான வேளாண் உற்பத்தி அமைப்புகள் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பல பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடா்ச்சியாக உயா்த்தியுள்ளது.
கிராம மக்களின் நுகா்வு அதிகரிப்பு: மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற மக்களின் நுகா்வு மும்மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு வரை கிராமப்புற மக்கள் தங்களின் வருவாயில் 50 சதவீதத்துக்கு மேல் உணவுக்காக செலவழித்து வந்த நிலையில், தற்போது உணவுக்கான அவா்களின் செலவினம் 50 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. அதாவது, தங்களின் வாழ்வின் தரத்தை உயா்த்துவதற்கான மற்ற தேவைகளுக்கு மேற்கொள்ளும் அவா்களின் செலவினம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் காரணமாக நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் இடையேயான மக்களின் நுகா்வு இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மக்களே அதிகமாக வசித்து வந்த கிராமப்புறங்களை முந்தைய அரசுகள் புறக்கணித்து வந்தன. இது கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயா்வுக்கு வழிவகுத்ததோடு, ஏழ்மை நிலையை அதிகரித்து நகா்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அண்மையில் நடத்திய ஆய்வில், இந்திய கிராமப்புறங்களின் ஏழ்மை நிலை விகிதம் கடந்த 2012-ஆம் ஆண்டு பதிவான 26 சதவீதத்திலிருந்து 2024-இல் 5 சதவீதமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிலா் பல ஆண்டுகளாக நாட்டில் ஏழ்மையை ஒழிக்கப்போவதாக வசனம் பேசி வந்த நிலையில், தற்போது நிஜமாகியிருப்பது எஸ்பிஐ ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்றாா் பிரதமா்.