கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் இன்று மரியாதை செலுத்தினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸும் இருப்பதால், அக்கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஜி.கே. மூப்பனாரின் மகனுமாக ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து, ஜி.கே. மூப்பனாருக்கு மரியாதை செலுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் வருகை தந்தனர். மேலும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷும் வருகை தந்திருந்தார்.
இந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் அருகருகே அமர்ந்திருந்தது மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷின் வருகையும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஏனெனில், கடந்த பேரவைத் தேர்தலின்போது, எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இருப்பினும், தற்போது இருவரும் அருகருகே அமர்ந்தது மட்டுமின்றி, இருவரும் சேர்ந்தே ஜி.கே. மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், இன்றைய நினைவுநாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அமர்ந்திருந்ததும்கூட கேள்வியை எழுப்புகிறது.
இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியிலும் எல்.கே. சுதீஷ் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் எல்.கே. சுதீஷுடன் டி.ஆர். பாலு நெருக்கம் காட்டியிருந்ததுடன், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரது வீட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தேமுதிக இணையப் போகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.