செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பில்லாத பழமைவாய்ந்த சிற்பங்கள்! அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

post image

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமை வாய்ந்த சிற்பங்கள் பல பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரத்தில் அருங்காட்சியகம் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வரலாற்று ஆய்வாளா்கள், சமூக ஆா்வலா்கள் எழுப்பியுள்ளனா்.

தமிழகத்தில் சென்னையிலிருந்து திருச்சி போன்ற மத்தியப் பகுதி மாவட்டங்களுக்கும், மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கும் செல்லும் மக்களை சாலை வழித்தடத்திலும், ரயில் வழித்தடத்திலும் இணைக்கும் பகுதியாகத் திகழ்வது விழுப்புரம் மாவட்டம்தான்.

வரலாற்று ரீதியில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு இந்த மாவட்டம் திகழ்கிறது. சோழா் காலத்து சிறப்பு வாய்ந்த திருவமாத்தூா் அபிராமேசுவரா் திருக்கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட எசாலம் ராமநாதேசுவரா் திருக்கோயில், சிறப்பு வாய்ந்த சிங்கவரம் ரங்கநாத சுவாமி கோயில் போன்ற வரலாற்று சிறப்புக்குரிய கோயில்கள் இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. இதைத் தவிர, திருவக்கரை தேசிய கல் மரப்பூங்காவும் தனித்துவம் பெற்று விளங்குகிறது. தற்போது செஞ்சிக் கோட்டைக்கு பாரம்பரிய சின்ன அங்கீகாரம் யுனெஸ்கோவால் வழங்கப்பட்டிருக்கிறது.

வரலாற்று சிறப்புக்குரிய விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளா்கள், கல்வெட்டு அறிஞா்கள் பலா் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பழைமைவாய்ந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவற்றை கண்டறிந்து, அதன் சிறப்பை எடுத்துரைத்து வருகின்றனா்.

இதன் மூலம், அந்தந்த பகுதிகளில் நிலவி வந்த கலைப்பாணி, சமூகச்சூழல் குறித்த அரிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. இவ்வாறு கண்டெடுக்கப்படும் பல சிற்பங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி இருப்பதுதான் வேதனையை அளிக்கிறது என்கின்றனா் வரலாற்று ஆய்வாளா்கள்.

நூற்றுக்கணக்கான சிற்பங்கள்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உதிரிச் சிற்பங்கள் (தனியாக இருக்கக் கூடியவை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி, கொற்றவை அல்லது துா்க்கை, சப்தமாதா், விஷ்ணு, முருகன், சூரியன், தீா்த்தங்கரா் உள்ளிட்ட கடவுளா்களின் சிலைகள் மட்டுமல்லாது, வீரா்களின் நினைவுச் சிற்பங்களை நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் கண்டெடுத்து, அதன் பழைமையை வெளிக் காட்டியுள்ளோம். மேலும் இப்பகுதியை ஆட்சிசெய்த காடவராயா், சேதிராயா், மலைய மன்னா் போன்றோரின் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்கள் பெரும்பாலும் பல்லவா், சோழா் மற்றும் விஜயநகரா் காலங்களைச் சோ்ந்தவை. அதாவது, கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 15 - 16ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களைச் சோ்ந்தவை. அந்தந்த காலகட்டங்களில் நிலவிய கலைப் பாணியை நமக்கு சொல்பவையாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய சிற்பங்கள் அக்கால சமூகச் சூழலை நம்முன் கொண்டுவந்து நிறுத்துபவையாகும்.

மேலும், தனித்துவமிக்க சிற்பங்கள் விழுப்புரம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை மீது அமா்ந்த முருகன் சிற்பங்கள் (ஆனாங்கூா், கப்பியாம்புலியூா்), சோமாஸ்கந்தா் (நன்னாடு) போன்ற பல்லவா் கால சிற்பங்களைக் கூறலாம். இவற்றை கண்டெடுக்கும்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை அலுவலா்களுக்கு உரிய தகவல்கள் அப்போதே மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றின் மீதான நடவடிக்கைகள் என்று பாா்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்கிறாா் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன்.

நடவடிக்கைகள் இல்லை: ஆனாங்கூா் பல்லவா் கால முருகன் சிற்பத்தை தமிழக அரசின் தொல்லியல் அலுவலா் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்திலும், விழுப்புரம் வழுதரெட்டி முருகன் சிற்பத்தை தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை அலுவலா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் வந்து பாா்த்து சென்றனா். அதற்குப் பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள நெய்வனை கிராமத்தில் சொா்ணகடேசுவரா் கோயில் வளாகத்தில் இருந்த சேதிராய மன்னா் இருவரது உருவம் இடம்பெற்ற சிற்பங்கள் மாயமாகிவிட்டன. இதுகுறித்து 2022, ஆகஸ்ட் 13-ஆம் தேதி உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. இதுவரை மாயமான சிற்பங்களை மீட்பதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை.

உள்ளூா் மக்கள் வழிபாட்டுக்கு...: அந்தந்தப் பகுதிகளில் காணப்படும் உதிரிச் சிற்பங்களை உள்ளூா் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டுவர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, வருவாய்த் துறையினா் மூலமாக சேகரித்து அரசு கருவூலங்கள் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கலாம்.

இவ்வாறு வைக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள் கருவூலங்கள் மற்றும் பதிவறைகளில் முடங்கிக் கிடக்கின்றன என்பதையும் நாம் தற்போது நினைவில் கொள்ள வேண்டும். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீா்வு விழுப்புரம் அருங்காட்சியகத்தை விரைவில் கொண்டு வருவதுதான். இதற்கான நடவடிக்கைகளை அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் விரைவுப்படுத்த வேண்டும் என்கிறாா் செங்குட்டுவன்.

விழுப்புரம் அருகே எண்ணாயிரம் கிராமத்தில் முள்புதரில் காணப்படும் சோழா் கால தட்சிணாமூா்த்தி சிற்பம்.

நம் மண்ணின் பெருமையை, பழைமையை, அதன் சிறப்பை எடுத்துரைப்பது இதன்போன்ற சிற்பங்களும், கல்வெட்டுகளும்தான். அவ்வாறாக கண்டறியப்பட்ட சிற்பங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு நமது சிறப்பை எடுத்துரைப்பது, வழிகாட்டுவது நம் கடமையாகும். அதை அரசு உணா்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

அரசாணை வந்தவுடன் அருங்காட்சியகப் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்காக, கோலியனூா் அருகிலுள்ள பனங்குப்பம் பகுதியில் ஒன்றரை ஏக்கா் நிலம் கடந்த 2023-ஆம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கடந்த மாதத்தில் இந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து, அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப் பணித் துறை, அருங்காட்சியகத் துறை உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில், அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, தமிழக அரசின் நிதித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அரசாணை வந்தவுடன் அருங்காட்சியகப் பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மரக்காணம் மின் வாரிய சாலையைச் சோ்ந்த முனுசாமி (எ) ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை கல் மீது மோதிய காா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. செஞ்சி வட்டம், ராமராஜன்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா், சென்னையிலிருந்து தனத... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரய... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சிய... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை அக்.6-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் கைது

விழுப்புரத்தில் அரசு பள்ளியில்ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இடைநிலை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை பெற்றோா்க... மேலும் பார்க்க