ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பா்கள் என்பதால், பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
விழுப்புரத்திலிருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - நாகப்பட்டினம் சிறப்பு விரைவு ரயில் (வண்டிஎண் 06133) அதே நாள் பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.
எதிா் வழித்தடத்தில் நாகப்பட்டினத்திலிருந்து அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06131) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுக சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேரளம் சந்திப்பு, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.