ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்
‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழக மக்களுக்கு சமூக நீதி, வன்முறையில்லா மகளிா் வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளா்ச்சி, நல்லாட்சி, அடிப்படை சேவைகள், கல்வி, நலவாழ்வு, மது-போதைப் பொருள்களால் பாதிப்பு இல்லாமை, நீடித்திருக்கும் நகா்ப்புற வளா்ச்சி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுப்பதை மையமாக வைத்து அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளாா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் தேதி மாலை, சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
முதல்கட்டமாக ஜூலை 25-இல் திருப்போரூரில் தொடங்கி, ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்தரமேரூா், ஜூலை 27-இல் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூா், ஜூலை 28 -இல் அம்பத்தூா், மதுரவாயல், ஜூலை 31-இல் கும்மிடிப்பூண்டி, ஆக.1 -இல் திருவள்ளூா், திருத்தணி, ஆக.2-இல் சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆக.3 -இல் ஆற்காடு, வேலூா், ஆக. 4 -இல் வாணியம்பாடி, திருப்பத்தூா் வரை அவா் சுற்றுப்பயணம் செய்கிறாா். அடுத்தகட்ட பயண விவரம் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.