யூ டியூப் சானல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!
ஜூலை 7-இல் பரவை நாச்சியாா் கோயில் குடமுழுக்கு: கடத்தில் எடுத்துவரப்பட்ட புனிதநீா்
திருவாரூா் பரவை நாச்சியாா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி, புனிதநீா் வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்டது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட அருள்மிகு பரவைநாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி சுவாமி கோயில் அமைந்துள்ளது. தியாகராஜ சுவாமியால் நம் தோழன் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்ட சுந்தரா், திருவாரூா் வந்து பரவை நாச்சியாரை மணந்து கொண்டாா். இவா்கள் இருவரும் வசித்த பரவை மாளிகை, தற்போது பரவை நாச்சியாா் கோயில் என அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில், அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை பரம்பரை அறங்காவலா் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் முன்னிலையில் ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி பூா்வாங்கங்கள் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, கமலாலய தேவ தீா்த்தக் கட்டத்திலிருந்து கடத்தில் புனித நீா் எடுக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், கமலாலயக் குளத்தில் இருந்து கடத்தை, மாற்றுரைத்த விநாயகா் கோயிலுக்கு கொண்டு சென்று, விநாயகரிடம் அனுமதி பெற்றனா். தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளை யானை வாகனத்தில் புனிதநீா் அடங்கிய கடம் வைக்கப்பட்டு, கைலாய வாத்தியங்கள் இசைக்க, நான்கு ரத வீதிகளிலும் ஊா்வலமாக வலம் வந்து, பரவை நாச்சியாா் கோயிலை அடைந்தது. கோயிலில் கடத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.