ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!' - ரூபியோ கருத்து
நேற்று முன்தினம் அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
இவர்கள் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் ஆகியன குறித்து விவாதித்தனர்.
இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மார்கோ ரூபியோ இந்தியா மீதான அமெரிக்காவின் வரி குறித்து பேசியுள்ளார்.

மார்கோ ரூபியோவிடம் ரஷ்யா மீது வரி விதிப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "ஐரோப்ப நாடுகளும் ரஷ்யா மீது வரி விதிப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
இப்போதும், ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் வாங்கி வருகிறது. இது அபத்தமானது.
ஆனால், அமெரிக்காவை இன்னும் அதிக வரிகளை விதிக்க கேட்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவில் பல நாடுகள் அப்படி செய்வதில்லை" என்று பதிலளித்துள்ளார்.
இந்தியா மீதான வரி
மேலும், இந்தியா மீதான வரிகள் குறித்து, "இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதுதான் இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் உண்டானதற்கான முக்கிய காரணம்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவை இருக்கிறது என்று புரிகிறது. ஆனால், அதற்காக தள்ளுபடி விலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவது ரஷ்யாவின் போருக்கு உதவுவதாக அமையும்.

இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய கூட்டாளிகள். ஆனால், எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் ஒத்துப்போக முடியாது.
அதுவும் குறிப்பாக எரிசக்தி விஷயத்தில், இன்னும் பல விற்பனையாளர்கள் உள்ளனர். இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.
ஆக, இந்திய - அமெரிக்க வரி பிரச்னை சரியாவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஹின்ட் கொடுத்திருக்கிறார் மார்கோ ரூபியோ.