சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
`ஜெய் பீம் படத்துக்கு இல்லை; ஆனால் `புஷ்பா' கடத்தல்காரருக்கு தேசிய விருது’ - அமைச்சர் சீதாக்கா
புஷ்பா 2 திரைப்படம் வெளியான அன்று, ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்குக்கு முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றதால் அங்கு திரண்ட ரசிகர் கூட்டத்தில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பரபரப்பாக இருக்கிறது. பெண் உயிரிழந்த ஒருவாரத்தில் விசாரணைக்காக ஹைதராபாத் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட அல்லு அர்ஜுன், அன்றே ஜாமீனில் வெளிவந்தார். மறுபக்கம், அவர் மீதான கைது நடவடிக்கைக்கு திரையுலகினர் தரப்பிலிருந்தும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்தது.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் மகன் கோமா நிலைக்குச் சென்றார். இவையனைத்துக்கும் சேர்த்து சட்டமன்றத்தில் உரையாற்றிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ``நடிகர்கள், பிரபலங்கள் பலர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். விபத்தில் கை, கால் போன மாதிரி வீட்டுக்குச் சென்று நலம் விசாரிக்கின்றனர். ஆனால், எவருமே பாதிக்கப்பட்ட குடும்பத்தையோ, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனையோ நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. அல்லு அர்ஜுன் கூட அதைச் செய்யவில்லை. இதுதான் உங்களின் மனிதமா? அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்றச் செயல். அதற்காக அவர் வருந்த வேண்டும். இந்தச் சம்பவம் அவருக்கு மட்டுமல்ல உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்." என்றார்.
இந்த நிலையில், நேற்று முலுகுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புஷ்பா படத்தை விமர்சித்த, மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சீதாக்கா, ``தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்திய, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலீஸ்கரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த மாதிரியான செய்தியைச் சொல்கிறது.
சட்டரீதியாகக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு போலீஸ் அதிகாரி, எப்படி பூஜ்ஜியமாக மாற்றப்படுகிறார். சமூகத்தை உயர்த்தும், பிறரது கண்ணியத்தைக் காக்கும் குணங்கள் கொண்டதாகத் திரைப்படங்கள் இருக்க வேண்டும். மேலும், சமூகத்தை ஊக்குவிக்கக்கூடிய முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, கடத்தலை மகிமைப்படுத்தும் அல்லது சட்டப்பூர்வமான அதிகாரத்தை குறைமதிப்பிற்குட்படுத்தும் படங்களுக்கு அல்ல." என்று கூறினார்.
புஷ்பா 1 படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.