ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓ(ட்)டிய கார்! என்ன நடந்தது?
ஜெர்மனில் கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது ஒருவர் காரை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெர்லினில் இருந்து தென்மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருள்கள் வாங்க மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த கருப்பு பிஎம்டபிள்யூ கார், மக்கள் மீது சரமாரியாக மோதிச் சென்றது.
கார் நிலைதடுமாறி ஓடியதாகக் கருதப்பட்ட நிலையில் அதனை ஓட்டிய நபர் வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட இருவர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?
கிறிஸ்மஸ் சந்தையில் குறைந்தது 400 மீட்டர்கள் வாகனம் சென்றதாகவும் அந்த பகுதி முழுவதும் ரத்தக்கறையுடன் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிறிஸ்மஸ் மரங்கள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தை பின்னர் மிகவும் கோரமாக காட்சியளித்ததாக புகைப்பட செய்தியாளர் கூறுகிறார்.
உடனடியாக அங்கு 100 போலீசார், மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சென்று மக்களை மீட்டுள்ளனர். சில மணி நேரங்கள் அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது.
யார் அந்த தலேப்?
இந்த விபத்தில் தொடர்புடைய சௌதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதான மருத்துவர் தலேப் என்பவரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் 2006 ஆம் ஆண்டு முதல் வசிக்கிறார். 2016 ஆம் ஆண்டு அகதி உரிமையைப் பெற்றுள்ளார். இவர் உளவியல் சிகிச்சை நிபுணர்.
அவர் தனியாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு பின்னால் ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் பயன்படுத்திய கார் வாடகைக்கு எடுத்தது என்பதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!