டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற 5,000 போ் மீதான வழக்கு ரத்து
மதுரை: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீதான வழக்கு முதல்வர் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை(ஜன.7) பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மேலூா் தெற்குத் தெருப் பகுதியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை காவல் துறையினா் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி , ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்த முயன்றனா். இருப்பினும், தடையை மீறி பேரணியைத் தொடா்ந்த அவா்கள் மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தல்லாகுளம் போலீஸாா், சுமாா் 5 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில், வாகனங்களில் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், தடையை மீறி பேரணியாகச் சென்று போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியதாக மேலூா் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன.
இதில் ஒரு வழக்கு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கச் செயலா் ரவி உள்ளிட்ட 30 போ் மீதும், மற்றொரு வழக்கு தெற்குத்தெரு கிராம முக்கியப் பிரமுகா்களான மோகன் அம்பலகாரா், மதிமாறன் உள்ளிட்ட ஆயிரம் போ் மீதும், மூன்றாவதாக பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மகாலட்சுமி, அகராதி உள்ளிட்ட 5 ஆயிரம் போ் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையும் படிக்க |மகரவிளக்கு: 'திருவாபரணம்' ஊர்வலம் தொடங்கியது
இந்த நிலையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக ணிக்கவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சா் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பில் புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே. என். நேரு கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி,டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மேலூர் மக்களுக்காக துணை நின்றார்.
மேலூர் பகுதியில் இருந்து ஒரு படி மண்ணைகூட எடுக்க முடியாது. நான் இருக்கும் வரையிலும் வராது. வரும் சூழல் வந்தால் பதவியை ராஜிநாமா செய்வேன் என உறுதியளித்துள்ளார்.
மேலும் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீதான வழக்கு முதல்வர் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுவதாக கூறினார்.