டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து: தலைவா்கள் வரவேற்பு
சென்னை : டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மதுரை மாவட்டம் மேலூா் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது, மேலூா் பொதுமக்களின் தொடா் போராட்டத்துக்கும், மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள் நடத்தி, அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேஷ நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அன்புமணி (பாமக): மேலூா் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடா்ந்து அவா்களின் உணா்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மக்களின் ஒன்றுபட்ட எழுச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இதேபோல், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.