வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்ந...
டங்ஸ்டன் : 'மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது..!' - எதிர்க்கும் ராமராஜன்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகரும், இயக்குநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
``இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் 'டங்ஸ்டன் சுரங்கம்' அமைக்கும் பணிக்கு தடை விதிக்கக்கோரி மதுரை சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பரித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது என்னை கலங்கடிக்கச் செய்தது. மேலூரை சுற்றியுள்ள 50 கிராமங்களையும் அங்கே ரத்தமும் சதையுமாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் இப்படி ஒரு திட்டம் அவசியமானதா...?
தமிழர்களின் வாழ்வியல் அடையாளமும், நுண்ணியல் வரலாற்று சான்றும், இதிகாச கல்வெட்டு அதிசயமும் ஆதாரமும் கொண்ட எம் மதுரை மண்ணின் மகத்துவத்தை தனித்துவத்தை அழித்து விட்டு என்ன சுரங்கம் அமைத்து எதை அதற்கு பதில் தந்து விட முடியும்...? பல தலைமுறைகளாக பாட்டன் பூட்டன் ஆண்ட விவசாய நிலங்களை அழித்துவிட்டு, வீடுகளை, நீர்தளங்களை, மலைக்குன்றுகளை அகற்றி அங்கே நிகழும் உங்கள் அதிசயம் முழுக்க மனிதகுலத்திற்கு எதிரானது, மேலூர் ஒட்டிய இத்தனை கிராமங்களோடு அரிட்டாபட்டியில் திட்டமிடும் இத்தகைய நிகழ்கால, எதிர்கால சந்ததிக்கு தீமை தரும், ஏன்... மதுரையின் அடையாளமே மறைக்கப்படும் இந்த டங்ஸ்டன் எடுக்கும் திட்டப்பணிகளை அறவே கைவிட வேண்டும்.
`மனம் துயரத்தில் பொங்க கூடாது’
இங்கே மட்டுமன்றி அருகேயுள்ள தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது, அதற்கு ஆளும் அரசாங்கங்கள் மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து இதுபோன்ற பூமியையோ இயற்கை வளங்களையோ, விவசாய வேளாண்மை நலங்களையோ பாதிக்காதவாறு செயல்பட வேண்டுகிறேன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது தான் அரசுகளே தவிர அரசு மக்களை தேர்ந்தெடுக்கவில்லை, தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற கூற்றுப்படி வாழும் மக்கள் வீடுகளில் பொங்கல் பொங்க வேண்டுமே தவிர அவர்கள் மனம் துயரத்தில் பொங்க கூடாது.
அதற்கு அரசாங்கம் உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மீண்டும் இதுபோன்ற தவறான திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து பல லட்சம் மக்கள் நெஞ்சில் ஆறுதல் தர வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பாதிப்பு எனக்கு வருத்தம் அளிப்பதை தாண்டி , மதுரை மேலூர் மண்ணில் பிறந்தவன், அந்த பூமியில் நடந்து திரிந்து அதில் விளைந்த அரிசியை தின்றவன், நீரை குடித்தவன் என்ற அந்த மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது, கனத்த வலியுடனே இதனை பகிர்கிறேன்,
மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆதரவாக அமைதி வழியில் போராடிய, ஆதரவளித்து வரும் அனைத்து கட்சியினருக்கும், விவசாய சங்கங்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் அனைத்து துறை சார்ந்த மக்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்,