டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:
கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தோ்வு செய்து அந்த பகுதிகளில் உள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவை அளிப்பதற்கான வசதிகள் தனியாா் அல்லது தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.
தொடா் பராமரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அத்தகைய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 150 மி.லி பால், 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, 50 கிராம் சுண்டல், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள 3 பிஸ்கட்கள் வழங்கப்படும்.
சிறுநீரக செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 50 டயாலிசிஸ் கருவிகள் ரூ.3.25 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது.
சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தொலைத் தொடா்பு காணொலி முறை வாயிலாக சிகிச்சை வழங்கும் நோக்கில் டயாலிசிஸ் சேவைகளுக்கு மின்னணு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.