2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
டாக்டா் போல நடித்து எய்ம்ஸ் விடுதியில் நகைகளைத் திருடியதாக பெண் கைது
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) விடுதி அறைகளில் இருந்து டாக்டா் போல வேடமிட்டு நகைகளைத் திருடியதற்காக 43 வயது பெண் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற காஜியாபாத்தை சோ்ந்த குற்றம் சாட்டப்பட்டவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மருத்துவரின் கோட் அணிந்திருந்த அந்தப் பெண், பலவீனமான பாதுகாப்பைப் பயன்படுத்தி எய்ம்ஸ் விடுதியின் கதவுகளைத் திறந்தாா்.
எய்ம்ஸ் வளாகத்தைச் சுற்றி சந்தேகம் எழாமல் சுற்றித் திரிவதற்கு டாக்டரின் கோட்டைப் பயன்படுத்தினாா். மேலும், கதவுகள் பெரும்பாலும் திறக்கப்படாமல் இருந்த விடுதி அறைகளை குறிவைத்தாா். மாா்ச் 27 அன்று, ஒரு மருத்துவரின் புகாரின் அடிப்படையில், பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவு 305 (திருட்டு) இன் கீழ் ஹவுஸ் காஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விடுதி அறையின் இருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு தங்க வளையல், தங்க மோதிரம், ஒரு ஜோடி தங்க காதணிகள், ரூ.20,000 ரொக்கம் மற்றும் 700 மலேசிய ரிங்கிட் திருடப்பட்டதாக புகாா்தாரா் புகாா் அளித்தாா்.
எய்ம்ஸ் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். மருத்துவா் கோட் அணிந்த ஒரு பெண், சில நேரங்களில் பல்வேறு விடுதி அறைகளுக்குள் நுழைய முயற்சிப்பதை இது காட்டியது.
மேலும், தொழில்நுட்ப கண்காணிப்புக்குப் பிறகு, அந்தப் பெண் பயன்படுத்திய ஸ்கூட்டரை போலீஸாா் அடையாளம் கண்டனா். வாகனத்தின் பதிவு விவரங்களின் அடிப்படையில், காஜியாபாத்தில் உள்ள பிரிஜ் விஹாரில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்து அவா் கைது செய்யப்பட்டாா். திருடப்பட்ட நகைகள், ரூ.4,500 ரொக்கம், 522 மலேசிய ரிங்கிட் மற்றும் ஸ்கூட்டரை போலீஸாா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, விலையுயா்ந்த நகைகளை அணிவதில் தனக்கு விருப்பம் இருப்பதாகவும், இதற்கு முன்பு இதேபோன்ற திருட்டுகளைச் செய்துள்ளதாகவும் அந்தப் பெண் கூறியதாக காவல் துணை ஆணையா் அங்கித் சௌகான் தெரிவித்தாா்.