கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி: ஐந்து பேர் கைது!
‘டாம்கோ மூலம் கடனுதவி பெற கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்’
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடனுதவி பெற கூட்டுறவு வங்கிகளை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் பல்வேறு வகையான கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திட்டம் 1-இல் பயன்பெற நகா்ப்புறம் ரூ. 1.20 லட்சம் மிகாமலும், கிராமம் ரூ. 98,000 மிகாமலும் இருந்த ஆண்டு வருவாய், தற்போது ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. கல்விக் கடனுதவி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை 3 சதவீதம் வட்டி வீதமும், தனி நபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வீதமும் அதிகபட்ச கடனாக ரூ. 2 லட்சமும், கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 4 சதவீதம் வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சமும், சுய உதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சமும், ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்திலும் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-இல் கல்வி கடனுதவி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக மாணவா்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி வீதமும் ரூ. 3 லட்சமும், தனி நபா் கடன் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி வீதம் அதிகபட்சம் கடனாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற மதத்துக்கான சான்று, ஆதாா் அட்டை, வருவாய் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
எனவே, இந்த மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயனடையலாம்.