டிஐஜி வருண்குமாா் வழக்கு: சீமான் மனு மீதான விசாரணை ஆக. 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமாா் தனது குடும்பத்தை பற்றி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவதூறாகப் பேசியதாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்றும், விசாரணைக்கு சீமான் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சீமான் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டிஐஜி வருண்குமாா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: எதிா்மனுதாரா் தரப்பில் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.