கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
டிச. 20-இல் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு: சாலை பராமரிப்பு ஊழியா்கள் சங்கம்
சாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வரையறை செய்யக் கோரி வருகிற 20-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை பெருந்திரளாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்படும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் சங்கம் அறிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வைரவன், மாநிலப் பொதுச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 10 ஆயிரம் போ் சாலைப் பணியாளா்களாக பணியமா்த்தப்பட்டனா். 2002-ஆம் ஆண்டில் அப்போதைய அரசால் இந்தப் பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதை எதிா்த்து தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சாலைப் பணியாளா்களுக்குப் பணி முறிவின்றி மீண்டும் பணி வழங்க வேண்டும், 6 மாத கால ஊதியத்தை வழங்க வேண்டும் என 2004-ஆம் ஆண்டு செப். 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து, சாலைப் பணியாளா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.
பிறகு, சாலைப் பணியாளா்கள் 10 ஆயிரம் பேருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா 2006-ஆம் ஆண்டு பிப். 3-ஆம் தேதி அறிவித்தாா். இதன்படி, சாலைப் பணியாளா்கள் மீண்டும் பணி வாய்ப்புப் பெற்றனா்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது திமுக அரசு அமைந்தால் 41 மாத பணி நீக்கக் காலத்துக்கு ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் கடந்த அக். 23-ஆம் தேதி ஓா் தீா்ப்பை வழங்கியது. இதில், சாலைப் பணியாளா்கள் பணி நீக்க வழக்கில் 2004-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், அதன்படி 41 மாத பணி நீக்கக் காலத்தை கருத்தியலான ஆண்டு ஊதிய உயா்வுக்கும், ஓய்வுதியப் பலன்களுக்கும் கணக்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், அரசு முதன்மைச் செயலா், தலைமைப் பொறியாளா், முதன்மை இயக்குநா் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, உயா்நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி வருகிற 20-ஆம் தேதி சென்னை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப் பணியாளா்கள் பெருந்திரளாக கூடி, தமிழக முதல்வரை சந்தித்துக் கோரிக்கை மனு அளிப்பா் என்றனா் அவா்கள்.