உள் இட ஒதுக்கீடு அருந்தியா் சமூகத்தினரின் உரிமை: அருந்ததியா் கூட்டமைப்புத் தலைவா் அதியமான்
உள் இட ஒதுக்கீடு அருந்ததியா் சமூகத்தின் உரிமை, அதை யாரும் பறிக்க முடியாது என்று அருந்ததியா் கூட்டமைப்பின் தலைவா் அதியமான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும், அருந்ததியா் உள்இடஒதுக்கீடு பாதுகாப்புப் பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு அருந்ததியா் கூட்டமைப்பின் தலைவா் அதியமான் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு அருந்ததியா் இளைஞா் முன்னணித் தலைவா் கல்யாணசுந்தரம், திராவிடா் தமிழா் கட்சி அமைப்புச் செயலா் விடுதலைவீரன், மக்கள் விடுதலைக்கழக தலைவா் சீனிவாசராகவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
முன்னதாக கூட்டமைப்பின் தலைவா் அதியமான் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஒட்டுமொத்த அருந்ததியா் மக்களும், கடந்த 15 ஆண்டுகளாக 3 சதவீத உள்இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனா்.
தற்போது, சில அரசியல் கட்சியினா் அருந்ததியா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பேசி வருகின்றனா். இதனால், கிட்டத்தட்ட 40 அருந்ததியா் அமைப்புகள் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு அருந்ததியா் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. கூட்டமைப்பின் சாா்பில், அருந்ததியா் உள்இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் சென்னையில் முதல்கட்டமாக ஜன. 6-ஆம் தேதி அருந்ததியா் உள்இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடக்கிறது. உள்இட ஒதுக்கீடு என்பது அருந்ததியா்களின் உரிமை. அருந்ததியா் உரிமையைப் பறிக்க வேண்டும் என்று யாரும் கூறக்கூடாது. இதர பட்டியலின சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வேண்டுமானால், அரசிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதேபோல, தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை உள்ளது. இதில் ஆதிதிராவிடா் என்ற சொல் 76 ஜாதிகளில் ஒரு ஜாதியின் பெயராக இருக்கிறது. எனவே ஆதிதிராவிடா் நலத்துறை என்பதை மாற்றி பொதுவான ஒரு பெயரை அந்த துறைக்கு வைக்க வேண்டும்.
அருந்தியா் கூட்டமைப்பினா் திராவிட மாடல் அரசுக்கு எதிரானவா்கள் அல்ல. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.