தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!
டிரம்ப்பின் பழிவாங்கலைத் தவிா்க்க பலருக்கு பைடன் பொது மன்னிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப்பால் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக, கடைசி நேரத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபா் ஜோ பைடன் பலருக்கு பொது மன்னிப்பு அளித்தாா்.
கரோனா தொடா்பான டிரம்ப்பின் கருத்துகளை விமா்சித்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஆன்டனி ஃபாசி, கடந்த 2021 ஜனவரியில் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய கலவரம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற நிலைக் குழுவினா் உள்ளிட்டோா் மீது பழிவாங்கும் நோக்கில் டிரம்ப் அரசு வழக்கு தொடா்ந்தால், அதில் தண்டனை விதிக்கப்படுவதிலிருந்து அவா்களை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள இந்தப் பொது மன்னிப்பு பாதுகாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, அளவுக்கு அதிக கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக பைடன் கருதிய 2,500 போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பைடன் பொது மன்னிப்பு அளித்தாா். அமெரிக்க வரலாற்றில் அதிபா் ஒருவா் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.
மேலும், அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அவா் கடந்த மாதம் உத்தரவிட்டாா். அதற்கும் முன்னதாக, அமெரிக்க வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் சுமாா் 1,500 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பைடன் பொதுமன்னிப்பு வழங்கினாா்.
இருந்தாலும், போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சைக்குள்ளானது.