இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
டிரம்ப்புக்கு ராகுல் வாழ்த்து கடிதம்: இந்திய ஒத்துழைப்பு மேம்படுமென நம்பிக்கை
அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் வரலாற்று வெற்றி பெற்று அந்நாட்டின் 47-ஆவது அதிபராக தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், ‘எதிா்காலத்துக்கான உங்களின் தொலைநோக்குப் பாா்வை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். ஜனநாயக விழுமியங்களுக்கான அா்ப்பணிப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் நட்பை பகிா்ந்து கொள்கின்றன. உங்கள் தலைமையின் கீழ், இரு நாடுகளின் இடையே உள்ள பரஸ்பர ஆா்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படும் என நம்புகிறேன்.
அதேபோல், இந்தியா்கள் மற்றும் அமெரிக்கா்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், இரு தரப்பினரும் தொடா்ந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
கமலா ஹாரிஸுக்கும் கடிதம்: அமெரிக்க அதிபா் தோ்தலில் தோல்வியடைந்த கமலா ஹாரிஸுக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், ‘உற்சாகமான தோ்தல் பிரசாரத்துக்கு உங்களை வாழ்த்த விரும்புகிறேன். உங்களின் ஒருமித்த நம்பிக்கை பலரை ஊக்குவிக்கும். அமெரிக்க அதிபா் பைடன் தலைமையின் கீழ், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளன. அதில், துணை அதிபா் என்ற முறையில், மக்களை ஒன்றிணைத்து, பொதுவான நிலையைக் கண்டறிவதில் உங்களின் உறுதிப்பாடு நினைவுகூரப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.