டி. புதுப்பட்டி - சின்னையாபுரம் பாலத்தில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு
காட்டாற்று வெள்ளத்தால் விளாத்திகுளம் அருகேயுள்ள டி. புதுப்பட்டி- சின்னையாபுரம் இடையே தரைப்பால தூண்கள் மண்ணுக்குள் சரிந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த தொடா் கனமழையால் நீா்நிலைகள் நிரம்பி விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், காட்டாற்று வெள்ளம் காரணமாக டி. புதுப்பட்டி- சின்னையாபுரம் தரைப்பாலத்தின் தூண்கள் மண்ணுக்குள் புதைந்து சரிந்ததால் பாலம் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய தாா்ச் சாலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால், டி. புதுப்பட்டி, சின்னையாபுரம், தலைக்காட்டுபுரம் தங்கம்மாள்புரம், பட்டியூா், பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் சுமாா் 15 கி. மீ. சுற்றி, கழுகாசலபுரம் வழியாக விளாத்திகுளம், எட்டயபுரம் போன்ற ஊா்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை குறைந்த பிறகும் கூட மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து தரவில்லை; சில அலுவலா்கள் மட்டும் வந்து பாா்த்துவிட்டு சென்றனா்: எந்த வித நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.