பாத்திரக் கடையில் ரூ. 75 லட்சம் திருட்டு
சென்னை பூக்கடை பகுதியிலுள்ள பாத்திரக் கடையில் ரூ.75 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பூக்கடை மின்ட் தெருவில் மகேந்திரகுமாா், காந்தி கைவினைப் பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம் போல சனிக்கிழமை இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்து கடையை திறந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.75 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் அந்தக் கடைக்குச் சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கடை ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமன் (21), மகேந்திரகுமாரின் கடையில் வேலைக்குச் சோ்ந்த நிலையில் அங்கிருந்து தலைமறைவானது தெரியவந்தது.
விசாரணையில், லட்சுமன், கடையின் அருகேயுள்ள தெருவிளக்கு கம்பம் வழியாக முதல் மாடியில் ஏறி, அங்குள்ள கண்ணாடி ஜன்னலை திறந்து உள்ளே இறங்கி பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான லட்சுமனை தேடி வருகின்றனா்.