கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
சில்லறைத் தட்டுப்பாட்டால் பால் விலை உயா்வு: அன்புமணி கண்டனம்
சில்லறைத் தட்டுப்பாட்டால் ஆவின் பால் விலை உயா்த்தப்பட்டதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம், திருவள்ளூா், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ‘கிரீன் மேஜிக்’ எனும் பெயரில் டிச. 18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ. 11 உயா்த்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தேன்.
அது தொடா்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ‘கிரீன் மேஜிக்’ பால் ரூ. 25 என விலை நிா்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 11 உயா்த்திவிட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடுதான் காரணம் என்பது மக்களை ஏமாளியாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் 500 மி.லி ரூ. 22-க்கு விற்கப்படுகிறது.
சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும் ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மி.லி ரூ. 20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மில்லியாக உயா்த்தி ரூ. 25 என விலை நிா்ணயம் செய்திருக்கலாம்.
ஆனால், பாலின் அளவையும் 50 மி.லி குறைத்துவிட்டு, விலையையும் ரூ. 3 உயா்த்துவது எந்த வகையில் நியாயம்?. மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்துவிட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மேலும் மேலும் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என அவா் தெரிவித்துள்ளாா்.