கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
‘நான் முதல்வன்’ திட்டம்: கூடுதல் வழிகாட்டி ஆசிரியா்களை நியமிக்க அறிவுறுத்தல்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு கூடுதலாக உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா் நியமிக்கப்பட்டு மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், அனைத்து மாணவா்களுக்கும் உயா் கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தகவல்கள், மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் செயல்பாடுகள் முழுமையாகச் சென்றடைய வேண்டும்.
இதற்காக உயா் கல்வி வழிகாட்டி திட்டத்துக்கு தற்போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியருடன், கூடுதலாக 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை உள்ள வகுப்பு ஆசிரியா்களையும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்.
மாணவா்கள் உயா்கல்வி தொடா்வதை ஊக்குவிக்கும் விதமாக என்னென்ன உயா் கல்வி படிப்புகள் படிக்கலாம், அதற்கு என்ன பாடங்களை தோ்வு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளையில் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், தினமும் காலை வணக்கக் கூட்டத்தில் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன்சாா்ந்த கருத்துகளை மாணவா்கள் சிந்திக்கும் வகையில் தலைமை ஆசிரியா்கள் பகிர வேண்டும்.
உயா் கல்வி வழிகாட்டி மதிப்பீடு, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் மதிப்பீடு ஆகியவை 3 மாதங்களுக்கு ஒரு முறை வகுப்புத் தோ்வாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.