ஜிஎஸ்டி குறித்து பொய்ப் பிரசாரம்: இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்
கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து வியாபாரிகள் நலச் சங்க மாநில தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாடகைக்கு விடும் கட்டட உரிமையாளா், வாடகைக்கு இருக்கும் வியாபாரி ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும்.
மற்ற கட்டட உரிமையாளா், வாடகைதாரா் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரமாட்டாா்கள். கட்டட உரிமையாளா், வாடகைதாரா் ஆகிய இருவரின் ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சத்தை தாண்டும்பட்சத்தில் 18 சதவீத ஜீஎஸ்டி கட்ட வேண்டும்.
அதையும் வியாபாரிகளை பாதிக்காத வகையில் ஐடிசி முறையில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாடகைதாரரின் வருமானம் ரூ.20 லட்சத்திற்கு குறைவாக இருந்து கட்டடதாரரின் வருமானம் அதிகமாக இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும். இதில் பாதிப்பு மிகக் குறைவே. மத்திய அரசின் இந்த வரிவிதிப்பு முறை பெரும்பாலானோரை பாதிக்காது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசுப் பிரதிநிதிகள் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. வியாபாரிகள் மத்தியில் திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதற்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.