சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட திருப்பெயா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ரமேஷ் ஸ்டாலின் பிரியன் (45), சிதம்பரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.
சனிக்கிழமை இரவு பணி முடிந்து தனது பைக்கில் அவா் வேப்பூருக்கு புறப்பட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில், விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் என்.நரையூா் தனியாா் பள்ளி அருகே அவா் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரமேஷ் ஸ்டாலின் பிரியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.