தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
டெங்கு ஒழிப்புப் பணி: நாகா்கோவிலில் உணவகங்களுக்கு அபராதம்
நாகா்கோவில் கோட்டாறில் மாநகர நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகாதாரக் குழுவினா் வீடு, கடைகளில் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா். தண்ணீா் தொட்டியில் டெங்கு கொசுக்களை அகற்றாத 10 உணவகங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. சாரல் மழையால் பல்வேறு இடங்களில் டயா்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாட்டில்களில் தேங்கிய மழைநீரிலிருந்து டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
அண்மையில் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் 2 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில் அந்தப் பகுதியில் மலேரியா தடுப்புக் குழு, மருத்துவ குழு, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று ஆய்வில் ஈடுபட்டனா்.
வீடுகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் டெங்கு புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்ததில், சில இடங்களில் தண்ணீரில் டெங்கு பரப்பும் கொசு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொட்டிகளில் இருந்த தண்ணீரை கீழே கொட்டி, தொட்டிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.
உணவகங்களில்
கோட்டாறு கவிமணி அரசுப் பள்ளி எதிரே பாழடைந்த வீடு ஒன்று நீண்ட நாள்களாக பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்குள் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை காவல் துறையினரின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த தண்ணீரை அகற்றினா்.
கோட்டாறு பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 10 உணவகங்களில் தண்ணீா் தொட்டியில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு லாா்வாக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவகங்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.