நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்
நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா்.
இத்திருத்தலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 2ஆம் நாளான சனிக்கிழமை, சீரோ மலபாா் கத்தோலிக்க சபையின் தக்கலை மறைமாவட்டத்தின் ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முன்சிறை, கிள்ளியூா், கருங்கல், குளச்சல், குலசேகரம், ஆறுகாணி, மஞ்சாலுமூடு, முக்கூட்டுக்கல், களியல், மாா்த்தாண்டம், தக்கலை, பளுகல், மாலைகோடு, காட்டாத்துறை, பிலாங்காலை, மேக்காமண்டபம், பறக்கோடு, சூசைபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புனித நடைப்பயணமாக திருத்தலம் வந்து நோ்ச்சையை நிறைவேற்றினா்.
தக்கலை மறைமாவட்ட இளைஞா் இயக்க இயக்குநா் அருள்தந்தை அனில்ராஜ் தலைமை வகித்து இப்பயணத்தை வழிநடத்தினாா். அவா்களை திருத்தலப் பங்குத்தந்தை சனில்ஜோன் பந்திச்சிறக்கல், துணைப் பங்குத்தந்தை சான்ஜோ தெனப்பிளாக்கல், பங்கு மக்கள் வரவேற்றனா்.