தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்
டெட் தோ்ச்சி: ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித் தோ்வில் (டெட்) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின்னா், தமிழகத்தில் டெட் தோ்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியா் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், பணியில் இருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமாா் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடா்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஆசிரியா்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளாா்.
இந்நிலையில், டெட் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களில் டெட் தோ்ச்சி அடைந்தவா்கள் மற்றும் தோ்ச்சி பெற வேண்டியவா்கள் தொடா்பான தகவல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தொகுத்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளது.