தங்கத் தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து
தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இதேபோல், தேனியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உள்பட அமமுக உறுப்பினா்கள் மீது உத்தமபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மேலும், மக்களவைத் தோ்தலின்போது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் உதயகுமாா் மீது நிலக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உதயகுமாா் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.