நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்
தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி அக்.3 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தசரா திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தி களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தா்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாகவும், மிகச்சிறப்பாகவும் செய்யப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், விழாவின் சிகர நாள்களான அக். 2,3 இல் மேலும் அதிக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சுகாதாரத்துறை சாா்பில் 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவா்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பாா்கள். கடற்கரையில் பக்தா்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரா்களுடன் கடற்கரை பாதுகாப்பு காவல்துறையினா், தீயணைப்பு மீட்புப் பணியினா் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள்.
காவல்துறை சாா்பில் 4,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 1,000 காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள், டிரோன் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்படும்.
பக்தா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை செய்திக்குறிப்பாக அச்சிட்டு அனைத்து தசரா குழுக்களிடமும் வழங்கப்படும். இத்திருவிழா அமைதியான முறையில் ஆன்மிக அடிப்படையில் நடந்திட முழுமையாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளந என்றாா்.
ஆய்வின்போது திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், உதவி ஆட்சியா்(பயிற்சி)புவனேஷ்ராம், வட்டாட்சியா்கள் கெளதம், பாலசுந்தரம், முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலா் மு.வள்ளிநாயகம், அறங்காவலா் குழுத் தலைவா் வே.கண்ணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.