தூத்துக்குடி தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயம்
தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயமானது குறித்து கடலோரக் காவல் படையினா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை, காந்தி நகா் மீனவா் காலனியைச் சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40) தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா், செப். 19ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு, உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளாா்.
இந்நிலையில் செப். 22ஆம் தேதி அதிகாலை மாலத்தீவு துறைமுகத்தில் நுழைய அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த, தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டாராம்.
இதுகுறித்து தகவலின் பேரில் மாலத்தீவு காவல் துறையினா், கடலோர காவல் படையினா் ஜெகதீஷை தேடி வருகின்றனா். தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.