தச்சுத் தொழிலாளியிடம் ரூ. 2.26 லட்சம் பண மோசடி
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளியிடம் ரூ.2.26 லட்சம் பண மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ராஜாமணி மகன் அன்பு(30), தச்சுத் தொழிலாளி. இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை தேடி வந்த இவா், தனது சுய விவரக்குறிப்புகளை இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.
இந்நிலையில், கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அன்புவின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பேசிய அடையாளம் தெரியாக நபா் குறைந்த முதலீடு செய்து, அதிகம் லாபம் பெறக்கூடிய பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து அன்பு ஜன. 6-ஆம் தேதி ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்து உடனடியாக ரூ.19,080 லாபம் கிடைத்ததாம்.
இதையடுத்து அந்த மா்ம நபா் தெரிவித்தபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2,26,189 ஐ ஜன. 8 முதல் 17 வரை 6 தவணைகளாக இணையவழியில் அனுப்பினாராம். ஆனால் அவருக்கு லாபத்தொகை வரவில்லை.
இது குறித்த புகாரின் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.