சர்வதேச சமையல் போட்டி; சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி: மாங்கல தோஷம் தீரும், சர்வ மங்கலங்களும் கைகூடும்!
மாங்கல்ய பாக்கியம் அருளும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது திருமங்கலங்குடி. இத்தலம் காவிரி வடகரைத் தலங்களில் 38-வது தலமாகும். இத்தலத்தினை அப்பர் மற்றும் சம்பந்தர் பாடியுள்ளனர். இந்த அற்புதமான தலத்தையும் அதன் தலபுராணத்தையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறையிலிருந்து 3 கி்.மீ. தொலைவில் திருமங்கலக்குடி அமைந்துள்ளது. இங்கு ஈசன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்கிற திருநாமத்தோடும் அம்பாள் அருள்மிகு மங்களாம்பிகை என்கிற திருநாமத்தோடும் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள தீர்த்தம் - மங்கல தீர்த்தம். இக்கோயிலின் விமானம் - மங்கல விமானம், இங்குள்ள விநாயகர் - மங்கல விநாயகர்.
இப்படி சகலமும் மங்கலமாக விளங்கும் இந்த ஆலயம் பெண்களுக்கு நித்திய சுமங்கலி பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது. வாருங்கள், அதற்கு அடிப்படையான தல புராணத்தைத் தெரிந்துகொள்வோம்

11- ம் நூற்றாண்டு. முதலாம் குலோத்துங்க மன்னனின் பிரதான அமைச்சர் ஒருவர் அலைவாணர். ஈசன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். திருமங்கலங்குடியில் அருளும் ஈசனுக்குக் கல்லால் ஆன ஒருகோயிலைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார்.
அந்தக் காலத்தில் காவிரிக் கரையில் பல சிவாலயப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதற்காகப் புதுக்கோட்டை மலைப் பகுதிகளில் உடைக்கப்பட்ட பாறைகள் வண்டிகளில் ஏற்றப்பட்டு, திருப்பணிகள் நடைபெறும் கோயில்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அலைவாணர் திருமங்கலங்குடியிலும் கற்றளி அமைய வேண்டும் என்று விரும்பி, கற்களை ஏற்றிவரும் வண்டிகளை நிறுத்தி வண்டிக்கு ஒரு கல் என திருமங்கலங்குடியில் இறக்கிவிட்டுச் செல்ல உத்தரவிட்டான். திருமங்கலக்குடிக் கோயில் மெள்ள மெள்ள வளரத் தொடங்கியது.
அலைவாணருக்கு வேண்டாத சிலர் மன்னரிடம் இதுகுறித்துத் தவறாகச் சொல்லினர். மன்னருக்குக் கோபம் வர அமைச்சரை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி அலைவாணரும் தண்டிக்கப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்ட அலைவாணரின் மனைவி துடித்துப்போனார். அம்பிகையின் சந்நிதிக்கு ஓடி அவளிடம் நியாயம் கேட்டாள்.
அம்பிகை தன் பக்தையின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கினாள். ஈசனும் அம்பிகையின் திருவுளத்தைப் புரிந்துகொண்டு அலைவாணரை உயிர்ப்பித்தார். இந்த அற்புதம் உலகெங்கும் பரவியது. தவறாக தண்டனை அளித்த மன்னனும் ஓடிவந்து ஈசனைப் பணிந்துகொண்டு அலைவாணரின் திருவடிகளிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அன்றுமுதல் மாங்கல்ய பாக்கியம் அருளும் அம்பிகையாக அம்பாள் அத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள் என்கிறது தலபுராணம். பிராணன் கொடுத்த ஈசன் என்பதால் பிராணநாதேஸ்வரர் என்பது ஈசனுக்கும் திருநாமம் ஆயிற்று.

காளிதேவி, பிரம்மன், காவிரி, அகத்தியர், நவகிரகங்கள் ஆகியோர் வழிபட்டு அருள்பெற்ற க்ஷேத்திரம் இது.
ஒருகாலத்தில் வெள்ளெருக்கங்காடாய் இருந்த காவிரிக் கரைப் பிரதேசம் இது. ஒரு முறை காலவ முனிவரின் சாபத்தால் பெரும் பிணிக்கு ஆளான நவகிரகங்களும் இந்த வனப் பகுதிக்கு வந்து தவமிருந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றனராம்.
ஐந்து தீபங்கள், மாங்கல்ய சரடு!
ஜாதக தோஷங்களால் பிரச்னைகள் சூழும் வேளையிலும், உயிராபத்து ஏற்படும் காலத்திலும், கணவர் நோய்வாய்ப்பட்டு அவதியுறும் காலத்திலும் இங்கு வந்து இந்த அம்பிகையை வழிபடுகிறார்கள் பெண்கள்.
தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் அன்னையின் சந்நிதியில் தீபமேற்றி அர்ச்சித்து, வழிபடுகின்றனர். அவளின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடுகளை பிரசாதமாகப் பெற்று அணிந்துகொள்கின்றனர்.
அம்பிகையின் அருளால் பிரச்னைகள் தீர்ந்ததும் அம்பிகைக்கு புடவை சாத்தி வழிபடுகின்றனர். அதேபோல், புதிதாகத் திருமண மாங்கல்யம் வாங்குபவர்கள், அதை அம்பிகையின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குவதும் வழக்கம்.
பங்குனிப் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் இரவில் திருக்கல்யாண வைபவம் நிகழும். மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல், நலுங்கு, மாலை மாற்றுதல், திருக்கல்யாணம் என கோலாகலமாக நிகழும் இந்த வைபவத்தின்போதும் பெண்களுக்கு மாங்கல்யசரடு வழங்கப்படுகிறது.

நவராத்திரி காலத்தில் தினமும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருளும் மங்களாம்பிகையை தரிசிப்பது விசேஷம். இங்கு வந்து வழிபட்ட பின்னர், அருகிலுள்ள சூரியனார் கோயிலில் அருளும் நவகிரகங்களை வழிபட வேண்டும்.
இதனால் கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப் படும் உச்சிக்கால பிரசாதமான தயிரன்னத்தை அருமருந் தாகப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாகத் தெரியவந்தால் கவலைப்படாதீர்கள். ஒருமுறை திருமங்கலக்குடிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வீட்டில் மங்கலம் எப்போதும் நிறைந்திருக்கும்.