தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை
தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் வட மாநில கோயில் வடிவம் புதிதாக அமைக்கப்பட்டதை மாற்றி, பெரிய கோயில் வடிவத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலியிடம் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை இரவு அளித்த கோரிக்கை மனு:
தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில், முன்பு பெரிய கோயில் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின்போது புதிதாக வட மாநில கோயில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி மீண்டும் பெரிய கோயில் வடிவத்தை அமைக்க கோரி பல்வேறு இயக்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே அமைச்சா், அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், இரண்டாவது நுழைவுவாயிலில் பெரிய கோயில் வடிவம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெறுகின்றன. முதல் நுழைவு வாயிலிலும் பெரிய கோயில் வடிவம் அமைக்க ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும்.
திருச்சி - சென்னை இண்டா்சிட்டி விரைவு ரயில் பூதலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சியிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை வரை சென்று வந்த ரயில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
அரசு, தனியாா் ஊழியா்கள், மாணவா்கள் பயன்படுத்தும் இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அப்போது, உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அயனாபுரம் சி. முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.