"?Hussain Manimegalai Couple is my Favourite❤️" -Divyabharathi | Vikatan Digital...
தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டதுடன் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டன.

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையிலான இந்த வழித்தடத்தின் அருகில் உச்சிப்புளியை அடுத்துள்ள பகுதியில் இந்திய கடற்படையின் 'பருந்து' விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய வகை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதி ரயில்வே தண்டவாளத்தின் அருகில் அமைந்திருப்பதால் 224 மீட்டர் தூரத்திற்கு மின்சார ரயிலுக்கான மின் கம்பங்கள் நடப்படாமல் மின் வயர்கள் புதைவடமாகச் செல்கிறது.
இதனால் இந்த இடைப்பட்ட 224 மீட்டர் தூரத்தினை கடக்கும் வரை எஞ்சின் உள்ளிட்ட ரயில் பெட்டிகளின் மீது அமைக்கப்பட்டுள்ள 'பேன்ட்ரோம்' எனப்படும் மின் தொடர்பு கருவிகள் மேல் எழும்பாதவாறு இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பகுதியில் ரயில் செல்லும்போது இந்த பேன்ட்ரோம் கருவிகள் இயக்கத்தை நிறுத்த எச்சரிக்கும் விதமாக இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று காலை வந்த ரயில் எஞ்சினின் மேல் உள்ள பேன்ட்ரோம் கருவி கீழே இறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ரயிலின் ஓட்டுநர் குறிப்பிட்ட இந்த 224 மீட்டர் பகுதியைக் கடந்துவிட்டதாகக் கருதி 214 மீட்டர் தூரத்திலேயே பேன்ட்ரோம் கருவியை மீண்டும் இயக்கியுள்ளார். இதனால் 10 மீட்டர் தூரத்தில் இருந்த இரும்புத் தடுப்பில் பேன்ட்ரோம் கருவி பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் ரயில் பாதையில் பொறுத்தப்பட்டிருந்த மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. நல்வாய்ப்பாக மின் கம்பிகள் அறுந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

இந்த விபத்தினால் மதுரை - ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் பரமக்குடி ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இதேபோல் ராமேஸ்வரம் - மதுரை இடையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.