Sathish - Deepa Couples: "எத்தனை Dosaதான் சாப்பிடுவீங்க?" | Vikatan Digital Awar...
விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை
கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது.
இதில் இந்திரஜித் மனைவி மற்றும் அவர்களின் 10 வயது மகள் அதிரிதி ஆகியோர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் சத்தீஸ்கரில் உள்ள கவர்தா என்ற இடத்தில் வந்தபோது இந்த விபத்து நடந்தது. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மிகவும் மோசமாக சேதம் அடைந்திருந்தன.
எனவே அவர்கள் உடல்களை விபத்து நடந்த ஊரிலேயே தகனம் செய்ய இந்திரஜித் முடிவு செய்தார்.
தகனம் செய்த தினத்தில் அதிரிதியின் பிறந்தநாள் ஆகும். சுற்றுலாவை முடித்துக்கொண்டு வந்த பிறகு பிறந்தநாளைக் கொண்டாடலாம் என்று தனது மகளிடம் இந்திரஜித் சொல்லியிருந்தார்.

மனைவி மற்றும் மகள் உடல்களை தகனம் செய்வதற்காக கொண்டு வந்தபோதுதான் தனது மகளின் பிறந்தநாள் இந்திரஜித்திற்கு நினைவுக்கு வந்தது.
உடனே மகளின் பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்த இந்திரஜித் தனது உறவினர்களுடன் கேக் வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் கேக் வாங்கி வந்தனர். மகளின் உடலைச் சிதையில் வைத்துக்கொண்டு இந்திரஜித் கேக் வெட்டினார்.
அவர் கேக் வெட்டியபோது அங்கு கூடியிருந்தவர்கள் கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினர். இந்திரஜித் கேக் வெட்டி சிதையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மகளுக்கு ஊட்டினார். அந்தக் காட்சி அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
இது குறித்து இந்திரஜித் கூறுகையில்,
"எனது மனைவி மற்றும் மகள் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டேன். திறந்த வெளியில் நீண்ட நேரம் உடல்கள் இருந்ததால் அழுக ஆரம்பித்துவிட்டது.
மருத்துவமனையில் உடல்களை வைக்க போதிய குளிர்சாதன பெட்டி இல்லை. எனவே அங்கேயே தகனம் செய்துவிட முடிவு செய்தோம்.
எனது மகளிடம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தேன். ஆனால் எனது மகளின் இறுதிச்சடங்கில் அவளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

கார் விபத்தில் இறந்த அனைவரும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள். அவர்கள் மத்தியபிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவை பார்த்துவிட்டு கொல்கத்தா செல்வதற்கு ரயிலில் ஏறுவதற்காக பிலாஸ்பூர் வந்துகொண்டிருந்த போது கார் விபத்து ஏற்பட்டது.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி மருத்துவமனையில் இறந்தார். போதிய குளிர்சாதன வசதி இல்லாமல் உடல்கள் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் பல மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. இதனால் உடல்கள் அழுக ஆரம்பித்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அருகிலேயே தகனம் செய்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.