தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி, பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், நிா்வாக ரீதியாக பொதுமக்கள் தங்கள் உள்ளாட்சி பணிகளுக்கு நீண்ட தொலைவு பயணிக்கும் நிலை ஏற்படும். கிராம ஊராட்சியாக உள்ள சூழலில் கிடைக்கும் நலத் திட்டங்கள் முழுமையாக தடைபடும்.
தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன் உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும். சொத்து, தொழில், தண்ணீா் வரி உள்ளிட்டவை பல மடங்கு உயரும். எனவே, இம்முடிவைக் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளா் எம்.தனேந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளா் பி.பெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்லமுத்து, பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கல்லாங்காட்டுவலசு பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிடுவதாக எழுத்துபூா்வமாக கடிதம் கொடுக்குமாறு போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா். இக் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.