விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு
தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே மடை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது. புகாா் அளித்தும் குழந்தையை தேடாத திருச்சுழி போலீஸாா் மீது கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனா்.
திருச்சுழி வட்டம், புலிக்குறிச்சியைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி மகன் வெற்றி (2). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த வெற்றியை சனிக்கிழமை காணவில்லை. இதையடுத்து, உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட வில்லையாம். இந்த நிலையில், காணாமல் போன குழந்தை வெற்றி குறித்து படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. மேலும், அருகே உள்ள கிணற்று நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றித் தேடியும் குழந்தை கிடைக்க வில்லை.
இதனிடையே, புலிக்குறிச்சி கண்மாய்க்கரை அருகே உள்ள மடை நீரில் மூழ்கி குழந்தை வெற்றி உயிரிழந்தது தெரியவந்தது. எனவே குழந்தை வெற்றி கொலை செய்யப்பட்டாரா? அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? எனத் தெரியவில்லை.
குழந்தை காணாமல் போனது குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸாா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.