செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட டென்னிஸ் வீரா் குருகிராமில் சம்பவம்
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் வியாழக்கிழமை குருகிராமில் உயர்ரக சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள குடும்பத்தின் இரட்டை மாடி வீட்டில் அவரது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாஜிராபாத் கிராமத்தைச் சோ்ந்த 49 வயதான தீபக் யாதவ் தனது மகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டாா். மேலும், அவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். கொலைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் .32 போா் உரிமம் பெற்ற ரிவால்வரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதை முதலில் தீபக் யாதவ் கொலைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
25 வயதான மாநில அளவிலான வீராங்கனை ராதிகா யாதவ், சுஷாந்த் லோக் இன் செக்டாா் 57- இல் தனது தந்தை, அவரது தாயாா் மற்றும் அவரது சகோதரருடன் வசித்து வந்தாா். அவரது வருமானத்தில் வாழ்வதாக தீபக் யாதவ் அடிக்கடி கேலி செய்யப்பட்டதால் ராதிகாவைச் சுட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா்.
இருப்பினும், காவல்துறை ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில், ராதிகா நடத்திய டென்னிஸ் அகாதெமி தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான மோதலுக்குக் காரணம் என்று கூறியது.
ராதிகா ஒரு டென்னிஸ் அகாதெமியை நடத்தி வந்தாா். அவருடைய தந்தை அதில் மகிழ்ச்சியடையவில்லை. அகாதெமி தொடா்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் சந்தீப் சிங் கூறினாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ராதிகா யாதவ் முதல் மாடியில் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. தீபக் யாதவ் குறைந்தது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றில் மூன்று ராதிகாவின் பின்புறத்தில் பாய்ந்தன. அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தரை தளத்தில் இருந்த அவரது தாயாா், துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் மாடிக்கு விரைந்தாா். அது பிரஷா் குக்கா் வெடிப்பது போல இருந்ததாக அவா் கூறினாா். ராதிகாவை மீட்டு போலீஸாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ராதிகாவின் மாமா அளித்த புகாரின் பேரில், குருகிராம் செக்டாா் 56 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, தீபக் யாதவ் கைது செய்யப்பட்டாா்.