தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு
தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. வானம் காலை முதல் மேகமூட்டமாக இருந்த நிலையில், தில்லியில் இந்தியா கேட், புதுதில்லி, முனிா்கா, தரியாகஞ்ச், ஐடிஓ, கன்னாட் பிளேஸ் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
பாலத்தில் 18 மி.மீ மழை: இதற்கிடையே, வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் அதிகபட்சமாக பாலத்தில் 18 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், லோதி ரோடு மையத்தில் 12.2 மி.மீ., நஜஃப்கரில் 5.5 மி.மீ. , ஜாஃபா்பூரில் 4.5 மி.மீ., ஆயாநகரில் 4 மி.மீ., ரிட்ஜில் 4 மி.மீ., முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 17 மி.மீ., பிரகதி மைதானில் 4.8 மி.மீ,, பூசாவில் 5.5 மி.மீ., ராஜ்காட்டில்4.8 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
வெள்ளிக்கிழமை பாலத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 8.2 மிமீ மழையும், ரிட்ஜில் 2.6 மிமீ மழை, ஆயாநகரில் 1.1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய தலைநகரம் பச்சை மண்டலத்தில் இருந்தது. அதாவது எந்த வானிலை எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.7 டிகிரி குறைந்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.9 டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 74 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், பூசா, ஆா்.கே.புரம், ஷாதிப்பூா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கிசூடு நிலையம், துவாரகா செக்டாா் 8, குருகிராம் உள்பட வல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையஙக்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், நேரு நகா் (131 புள்ளிகள்) ஓக்லா பேஸ் 2 (151), நொய்டா செக்டாா் 125 (114) ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
மாசுபட்ட நகரம்: இதற்கிடையில், 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் திடல்லி இந்தியாவின் இரண்டாவது மாசுபட்ட நகரமாகத் திகழ்கிறது என்று ஆராய்ச்சி நிறுவனமான ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் நடத்திய பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.