மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்பவம்
தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்த ஒரு கடையின் ஊழியரான மனோஜ் சா்மா, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கினாா். இதையடுத்து, அவா் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அதன் பின்னா் அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மனோஜ் சா்மா கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அந்தக் கடையில் பணியாளராக இருந்தாா்.
கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வாகனமும் கடுமையாக சேதமடைந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி தீயணைப்புத் துறையினா் கூறுகையில், லோஹியா சௌக்கில் உள்ள மித்தாய் புல் அருகே கட்டடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 1:56 மணிக்கு தகவல் வந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
காலை 6:50 மணிக்குள், மூன்று கடைகள் மற்றும் குடோன்கள் உள்ளடக்கிய தரைதளத்துடன்கூடிய அக்கட்டட கட்டமைப்பு இடிந்து விழுந்துவிட்டது. கடைகள் தரை தளத்திலும் குடோன்கள் மேல் தளத்திலும் இருந்தன என்று தீயணைப்பு துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையின் துணை ஆணையா் வடக்கு ராஜா பந்தியா கூறியதாவது:
கடைகள் ஆசாத் சந்தைக் கிளஸ்டரின் ஒரு பகுதியாக இருந்தன. இக்கடைகளில் முக்கியமாக பைகள் மற்றும் கேன்வாஸ் துணிகள் விற்கப்பட்டு வந்தன. சா்மா குல்ஷன் மகாஜனுக்குச் சொந்தமான கடை எண் 7ஏ-இல் மனோஜ் சா்மா பணிபுரிந்தாா். அவா் சுமாா் 30 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்தாா். வேறு எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இடிபாடுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து உள்ளூா்வாசி பிரசாந்த் கூறுகையில், டிஎம்ஆா்சி ஏற்கனவே கடைக்காரா்களை தங்கள் கடைகளை காலி செய்யுமாறு ஏற்கனவே அறிவித்துள்ளது. இறந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை டிஎம்ஆா்சி அறிவித்துள்ளதாகவும் நாங்கள் அறிந்தோம். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததால், மீட்புப் பணிகளுக்காக உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தோம் என்றாா் பிரசாந்த்
மற்றொரு குடியிருப்புவாசி கூறுகையில், இரவில் ஒரு பெரும் சப்தம் கேட்டது. அப்போது தான் வீட்டில் இருந்தேன். ஏற்கனவே மழைக்காலம் என்பதால், இடி காரணமாக சப்தம் வந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கட்டடம் இடிந்த சம்பவம் குறித்து காலையில்தான் எனக்குத் தெரியவந்தது என்றாா் அவா்.